கடந்த சில வாரங்களுக்கு முன்பு விக்ரம் கதாநாயகனாக நடித்த கோப்ரா திரைப்படம் வெளியானது. அதில் ஆச்சரியப்படத்தக்க அம்சமாக அமைந்தது என்னவென்றால் அந்த படத்தில் விக்ரம் எட்டு விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்த நிலையில் கார்த்தி நடித்து தற்போது தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள சர்தார் திரைப்படத்தில் மொத்தம் பதினைந்து விதமான கெட்டப்புகளில் கார்த்தி நடித்துள்ளார் என்கிற ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் இந்த படத்தில் முதன்முதலாக இந்திய உளவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி என்பதால் ஒரு உளவாளியின் வேலையே விதவிதமான தோற்றங்களில் தன்னை மாற்றிக்கொண்டு எதிரிகளை கண்காணிப்பது தான் என்பதால் இந்த கெட்டப்புகள் எதுவுமே வலிந்து திணிக்கப்பட்ட தாக இருக்காது என்பதை உறுதியாக சொல்லலாம்.
அதுமட்டுமல்ல சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இரும்புத்திரை ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ள பி.எஸ்.மித்ரன் மூன்றாவதாக இயக்கியுள்ள படம் இது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக ராசி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் கன்னக்குழி அழகி லைலா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் லைலா என்று சொல்லலாம்..