கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மற்ற மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் மார்க்கெட்டை தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் உயர்த்தியுள்ள இந்த படம் ஏனோ சில காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்து விட்டது.
குறிப்பாக இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா சாமியாட்டம் ஆடிய சாமி சாமி பாடலும், ஓ சொல்றியா மாமா என ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்த சமந்தாவும் ரசிகர்களை கவர்ந்து விட்டனர். குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள் வரை இந்த பாடலுக்கு தாங்களும் ஆடி அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இந்த பாடல்கள் பதிந்து விட்டது.
இது ஒரு பக்கம் என்றால் நடிகர் அல்லு அர்ஜுன் பேசிய வசனங்களும் அவர் ஸ்டைலாக தனது இடது கையை தாடையின் கீழ் வைத்து தேய்த்தபடி பேசும் மேனரிசமும் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் முதற்கொண்டு பலரையும் கவர்ந்து விட்டது. அது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் கூட சோசியல் மீடியாவில் நிறைய வெளியாகின.
தற்போது இதையெல்லாம் தாண்டி லேட்டஸ்டாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகளில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் கெட்டப்பில் இருக்கும் விநாயகர் சிலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்த சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. இதுபற்றிய புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் பிள்ளையாரை கூட புஷ்பாஞ்சலி விட்டு வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.