Home Review திருச்சிற்றம்பலம் ; விமர்சனம்

திருச்சிற்றம்பலம் ; விமர்சனம்

ஏற்கனவே மூன்று ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவகர் – தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் நான்காவது படம் இது. யார் இந்த திருச்சிற்றம்பலம் ? பார்க்கலாம்.

தனுஷ், அவரது அப்பா போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ், தாத்தா பாரதிராஜா மூவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள்.. தாயையும் தங்கையையும் ஒரு விபத்தில் பறிகொடுத்த தனுஷுக்கு அதற்கு காரணமாக இருந்துவிட்டார் என தந்தை மீது கோபம்.

அதனால் தந்தையிடம் பாராமுகம் காட்டும் தனுஷுக்கு தாத்தாவும் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவயது தோழியான நித்யா மேனனும் தான் ஆறுதல்.

டெலிவரி பாயாக வேலை பார்க்கும் தனுஷ், பள்ளியில் ஒருதலையாக காதலித்த ராசி கண்ணாவை மீண்டும் ஏதேச்சையாக சந்திக்கிறார். ராசி கண்ணாவும் நெருக்கமாக பழக அதை காதலாக நினைத்து அவரிடம் பூங்கொத்தை நீட்டுகிறார் தனுஷ். ஆனால் அவரோ இதெல்லாம் சும்மா ஜாலிக்காக என்று கூறிவிட்டு தனுஷை ஒதுக்குகிறார்.

பின்னர் கிராமத்தில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும்போது கிராமத்து பெண் பிரியா பவானி சங்கரை பார்த்ததும் அவர் மீது உடனடி காதல் வருகிறது தனுஷுக்கு. ஆனால் அவரும் தனுஷின் காதலை நிராகரிக்கிறார்.

இவரது காதலுக்கு எல்லாம் ஆலோசனை வழங்கும் நித்யா மேனன் தான் உனக்கு சரியான ஜோடி என கை காட்டுகிறார் தாத்தா பாரதிராஜா. உடனே நட்பை காதலாக மாற்றி நித்யா மேனன் மீது காதல் பார்வை வீசுகிறார். தனுஷ்.

ஆனால் அவரோ அதை புறந்தள்ளி விட்டு வெளிநாட்டு வேலைக்காக கனடா பறக்கிறார். ஆனால் நித்யா மேனன் சிறுவயதிலிருந்தே தனுஷை காதலித்தார் என்பது அவர் போனபின் தான் தெரிய வருகிறது. காதலை மீட்டெடுக்க தனுஷ் என்ன முயற்சி செய்தார் ? காதல் கை கூடியதா என்பது கிளைமாக்ஸ்.

திருச்சிற்றம்பலம் என பெயர் கொண்டிருந்தாலும் பழம் என அனைவராலும் அழைக்கப்படும் தனுஷ், நீண்டநாளுக்கு பிறகு பக்கத்து வீட்டு பையனாக நம்மை மீண்டும் கவர்கிறார். தந்தையின் மீது வெறுப்பு, தாத்தாவிடம் ஜாலி கலாட்டா, தோழியிடம் அழகான நட்பு, மாடர்ன் காதலை புரிந்து கொள்ளாத குழப்பம் என எல்லாம் கலந்த ஒரு கலவையாக தனது கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தனுசை பார்ப்பதற்கு எல்லோருக்குமே பிடிக்கும்.

மூன்று கதாநாயகிகளில் முதலிடம் பிடிக்கிறார் நித்யா மேனன். சொல்லப்போனால் தனுஷையும் தாண்டி இந்த படத்தை இன்னும் தாங்கி பிடிக்கிறார் நித்யா மேனன். இப்படி ஒரு தோழி நமக்கு கிடைக்க மாட்டாளா என படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்து விடுகிறார்.

மார்டன் காதலியாக கச்சிதமான நடிப்பால் நம்மை கவர்கிறார் ராசி கண்ணா. கொஞ்ச நேரமே வந்தாலும் கிராமத்து எபிசோடில் வரும் பிரியா பவானி சங்கர் க்யூட்டான நடிப்பால் நம்மை கவர்கிறார். தனுஷின் காதலை அவர் வெகு சாதாரணமாக நிராகரிக்கும் போது சபாஷ் பெறுகிறார்.

பாசமான தந்தை ஏதோ ஒரு கட்டத்தில் மகனுக்கு பிடிக்காமல் போனதால் அவரது வாழ்க்கை எப்படி மாறி விடுகிறது என்பதை தனது கதாபாத்திரம் மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளார் பிரகாஷ்ராஜ்.

இவர்கள் இருவரையும் சமாளிக்கும் தாத்தா கதாபாத்திரத்தில் முந்தைய படங்களில் தான் நடித்ததை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் நடிகர் பாரதிராஜா. குறிப்பாக இந்த படத்தில் காமெடி நடிகர் என தனியாக இல்லையே என்கிற குறையை பாரதிராஜாவும் நித்யா மேனனும் இணைந்து போக்கி விடுகின்றனர்.

இவர்கள் தவிர முனீஸ்காந்த், ஸ்ரீரஞ்சனி என இன்னும் பலரும் இந்த படத்தில் தங்களது பங்களிப்பை மிகச்சரியாக கொடுத்திருப்பதால், இந்த படம் ஒரு பீல் குட் படமாக நம் மனதில் பதிந்து விடுகிறது.

நீண்ட நாளைக்கு பிறகு இந்த படத்தில் தனுசுக்காக கைகோர்த்து இருக்கும் இசையமைப்பாளர் அனிருத், அந்த சந்தோஷத்திலேயே மிகப்பெரிய பங்களிப்பு எதையும் கொடுக்க தவறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக பிடித்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மித்ரன் ஜவகர். இது ஏற்கனவே வந்த சில படங்களின் கதைதானே என்பதை எல்லாம் புறந்தள்ளி விட்டு, ஷோபனா போன்ற ஒரு தோழி நமக்கு இருக்கிறாரா என இளைஞர்களை தேட வைத்து அனுப்பி வைக்கிறார் மித்ரன் ஜவகர். அதுதான் இந்த படத்தின் வெற்றியின் கூட.