கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகத்தில் போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் கேரக்டரில் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.
ரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை ஆய்வில் உறுதுணையாக இருந்து, இதை தொகுக்க சுபன், முத்துச்செழியன் இருவரும் உதவி செய்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.
ஏற்கனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அனைத்து மக்களுக்கும் இந்த படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் துவங்கியுள்ளனர்.
தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.


























