தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதனை முதலில் இந்திய அளவிலும் அதைத்தொடர்ந்து உலக அளவிலும் கொண்டு சென்ற பெருமை இயக்குனர் ஷங்கரையே சாரும். குறிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை ஹீரோக்களும் ஷங்கர் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிட மாட்டோமா என தங்களது விருப்பத்தை பல தருணங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமல்ல ஷங்கர் தனது படங்களில் இந்த சமூகத்திற்கு தேவையான முக்கியமான செய்தியையும் சேர்த்து கொடுத்திருப்பார். அப்படிப்பட்ட பிரமாண்ட இயக்குனருக்கு ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இன்று பட்டமளிப்பு விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பட்டமளிப்பு விழா பேருரையாற்றிப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இவ்விழாவில் இயக்குனர் ஷங்கர் மட்டுமின்றி, புகழ்பெற்ற ஆளுமைகளான பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, இந்திய கிரிக்கெட் வீரர் திரு.சுரேஷ்குமார் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் திரு.விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.