படம் ஓடுகிறதோ இல்லையோ அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நல்ல கதைகளை தேடித்தேடி படமாக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர் இயக்குனர் வசந்தபாலன். அதனால்தான் அவரது அங்காடித்தெரு திரைப்படம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் முனைப்புடன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய வசந்தபாலன் தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்கிற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதுபற்றி மேலும் அவர் பேசியபோது, “தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில் தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான்.. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம்..
இப்போது இங்கே வழங்கப்பட்ட விருதுகளில் கூட கதாசிரியருக்கு என ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இங்க இருக்கும் தயாரிப்பாளர்கள் இனிவரும் காலத்தில் கதாசிரியர்களிடமிருந்து கதையை பெற்றுக்கொண்டு அதன்பிறகு ஹீரோக்களை தேடிச்செல்ல வேண்டும்.. மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்பு தான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.
நாளைய இயக்குனர்கள் என்கிற போட்டி மூலம் இயக்குனர்கள் தான் வருகிறார்களே தவிர, எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் வருவதில்லை. அடுத்த வருடமாவது எழுத்தாளர்களுக்கான விருதுகளை கொடுங்கள். டெக்னிக்கலாக தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால் கதாசிரியர் என்கிற ஒரு இனம் அழிந்து விட்டது. கதாசிரியர் என்கிற இனத்திற்கு இந்த மேடையில் ஒரு நாற்காலியாவது கொடுத்திருக்க வேண்டும்.
எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும். நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்