பான் இந்தியா என்கிற வார்த்தை கடந்த ஒரு வருடத்தில் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. அதற்கு ஏற்றபடி தென் இந்திய மொழிகளில் தயாராகும் படம் இந்தியிலும், இந்தியில் தயாராக படம் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலம் அமைத்தது போல ஆகிவிட்டது.
அந்தவகையில் பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் ஆமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழ் ரசிகர்களுக்கும் விருந்தாகும் விதமாக வெளியாக இருக்கிறது.
கரீனா கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். அத்வைத் சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை பார்க்கும் பல காட்சிகள் ஆச்சரியப்படுத்துவதாகவும் பரவசப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
குறிப்பாக அமீர்கானின் இளமை தோற்றம் நிஜமா, கிராபிக்ஸா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வெகு இயல்பாக அமைந்திருக்கிறது.
அவரது கதாபாத்திரம் சாதாரண காமெடியனாக தோன்றினாலும் ராணுவ வீரராக வீர சாகசம் செய்வாரோ என்று எண்ணவைக்கும் காட்சிகளும் இருக்கின்றன. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம்.