கொரோனா தாக்கம் ஆரம்பித்த பிறகு சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் நல்ல வழிகாட்டும் என்று தான் பலரும் நினைத்தனர். அதேசமயம், “ஓடிடியில் படத்தை வெளியிடுவது சுலபம் என்றே பலரும் நினைக்கிறார்கள்.. ஆனால் நிஜத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டி இருக்கிறது காரணம் இந்த முறையில் படத்தை வெளியிடுவதற்கு பல படங்கள் வரிசையில் நிற்கின்றன” என்று கூறுகிறார் வார்டு 126 படத்தின் இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன். இதைத்தொடர்ந்து இந்த படம் வரும் ஜூலை 22ஆம் தேதி தியேட்டர்களிலேயே வெளியாகிறது.

“ஒவ்வொரு துறையிலும் இருண்ட பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல் நான் ஐடி துறையில் பணியாற்றியபோது, என் கண்முன்னே நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார் இயக்குனர் செல்வகுமார் செல்லப்பாண்டியன்.

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இந்த படம் உருவாகி உள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப்படத்தில் ஸ்ரத்தா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, மைக்கேல் தங்கத்துரை மற்றும் ஜிஷ்ணு மோகன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.