சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரையுலக பயணத்தை அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு அவரது திரையுலக பயணத்தில் அண்ணாமலை திரைப்படம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

கடந்த 1992-ல் இதே நாளில் வெளியான அந்த படம் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைத்ததுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மாஸ் ஹீரோ அந்தஸ்தை இன்னும் பல படிகள் மேலே உயர்த்தியது. குடும்பப்பாங்கான கதையம்சம், நட்,பு துரோகம் என அனைத்தையும் சரிவிகிதமாக கலந்து இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா.

இந்த படத்தில்தான் முதன்முதலாக இசையமைப்பாளர் தேவா சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்திற்கு இசையமைத்தார். முதல் படத்திலேயே தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைத்த தேவா, பாடல்கள் அனைத்தையும் சூப்பர்ஹிட்டாக கொடுத்தவுடன் விதவிதமான பின்னணி இசையையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வடிவமைத்துக் கொடுத்தார்.

அதுமட்டுமல்ல அப்போதிருந்து இப்போது வரை சூப்பர்ஸ்டார் ரஜினியின் டைட்டில் கார்டு போடப்படும்போது ரசிகர்களை புல்லரிக்கச் செய்யும் விதமாக வரும் அவரது பெயர் வரும் அறிமுக காட்சிக்கான பின்னணி இசையை மாஸாக அமைத்துக் கொடுதார்.

இன்று இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதுடன் இந்த படம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில்தான் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இயக்கி அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டிற்கு சென்று அந்த நிகழ்வை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.