அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கியுள்ள படம் ’D 3’. இந்தப்படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க, சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் இந்த ’D 3’. படமும் ஒரே நாளில் நடக்கும் ஒரு கொலை, ஒரு விபத்து, ஒரு மேன் மிஸ்ஸிங் என மூன்று விஷயங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனிடையே நடக்கும் மர்மங்களை தேடிப்போகும் ஹீரோவுக்கு அது தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரியவர, அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் இயக்குநர் பாலாஜி படம் பற்றி கூறும்போது, “நான் கேள்விப்பட ஒரு உண்மை விஷயம் பற்றி, அதேசமயம் இதுவரை வெளிவராத விஷயம் பற்றி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்” என்கிறார்.
படத்தின் கதைக்களம் குற்றாலம் என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பை குற்றாலத்திலேயே நடத்தியுள்ளனர். மேலும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் பாலாஜி கூறும்போது, “கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்த சமயத்தில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவந்த 3௦ வயது நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்..
அதேபோல சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஒருநாள் வாடகையாக மட்டுமே ரெண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி படப்பிடிப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம்.. ஆனால் அன்றைய தினம் காலை படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திறங்கிய நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது. இப்படி நிறைய அனுபவங்களை கடந்து இந்தப்படம் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார். .