எதிர்நீச்சல், காக்கிசட்டை என சிவகார்த்திகேயன் படங்களையும், கொடி, பட்டாஸ் என தனுஷ் படங்களையும் இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரிடம் இணை, துணை இயக்குனராக பணியாற்றியவர் உலகநாதன் சந்திரசேகரன். இவர் முதன்முறையாக குதூகலம் என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக பாலமுருகன் என்பவர் நடிக்க, அவருக்கு ஜோடியாக ராட்சசன் மற்றும் அசுரன் புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி, நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் நடிகர்கள் பலரும் இந்தப்படத்தில் இடம் பெறுகின்றனர்.
இந்த படம் திருப்பூரில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி உள்ளது. குறிப்பாக பனியன் உற்பத்திக்கு பெயர் போன திருப்பூரில் பின்னலாடை தொழிலில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி விறுவிறுப்பாகவும் அதேசமயம் நகைச்சுவையாகவும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் உலகநாதன்.
தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
ஒரு மிகப்பெரிய துணிக்கடையில் வேலை செய்யும் அடித்தட்டு இளைஞர்களின் பிரச்சினைகளை எப்படி அங்காடித்தெரு படம் வெளிச்சம் போட்டு காட்டியதோ, அதுபோல இந்த படமும் திருப்பூர் பனியன் கம்பெனி உலகத்தில் நடக்கும் சில பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டும் என்கிறார்கள் படக்குழுவினர்.