ரேடியோ ஜாக்கியாக தனது கலையுலக வாழ்க்கையை தொடங்கிய ஆர்ஜே பாலாஜியின் சமீபகால வளர்ச்சி அசுரத்தனமானது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு எல்கேஜி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்த ஆர்ஜே பாலாஜி அதைத்தொடர்ந்து மூக்குத்தி அம்மன், சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் ஹீரோவாக வளர்ந்ததுடன் ஒரு இயக்குனராகவும் தன்னை உருமாற்றிக் கொண்டு உள்ளார்.
ஆர்ஜே பாலாஜி வித்தியாசமான சிந்தனை கொண்டவர் என்பது அவரது பேச்சுகளில் அவ்வப்போது வெளிப்படும். அந்த வகையில் வீட்ல விசேஷம் படத்தின் வெற்றிக்காக நன்றி சொல்லும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்ஜே பாலாஜி தளபதி விஜய்க்காக தான் ஒரு கதை தயார் செய்துள்ளதாகவும் அதை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விஜய்யிடம் நேரிலேயே சென்று கூறியதாகவும் ஒரு ஆச்சரிய தகவலை தெரியப்படுத்தினார்.
தான் தயார் செய்து வைத்திருந்த ஒன்லைனை கிட்டத்தட்ட 40 நிமிடம் விஜயிடம் கூறியதாகவும் விஜய்க்கு அந்தக் கதை பிடித்து விட்டதாகவும் ஆர்ஜே பாலாஜி கூறினார். மேலும் விஜய் அவரிடம் இந்த முழு கதையும் எப்போது தயாராகும் என கேட்க, இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று சொன்னதும் ஷாக்காகி விட்டாராம் விஜய்.
அதன்பிறகு அவரிடம் பேசிய ஆர்ஜே பாலாஜி வீட்ல விசேஷம் என்கிற ஒரு ரீமேக் படம் எடுத்து இருக்கிறோம். அதற்கே ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. உங்களைப்போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து கதை உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகாதா என்று பதில் கூறினாராம்.
மேலும் இந்த விஷயத்தை நான் வெளியே சொல்லிக் கொள்ளலாமா என விஜய்யிடம் கேட்க, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை தாராளமாக நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள் என்று கிரீன் சிக்னல் காட்டினாராம் விஜய்.
உங்கள் படத்தை இப்போதே விஜய் 67 என்பது போல இயக்கணும் என்கிற அவசரமில்லை. விஜய் 77 விஜய் 87 என எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்று விஜய் சாரிடம் கூறினேன் என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.