மாதவனுக்கு திரையுலகில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இறுதிச்சுற்று மூலம் மீண்டும் தனது இரண்டாவது சுற்றை ஆரம்பித்த மாதவன் படங்களை செலக்டிவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சாதனைகளையும் மையப்படுத்தி ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்கிற படத்தை நடித்து இயக்கியுள்ளார் மாதவன். இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகி அதன்பிறகு சிறையிலிருந்து வெளிவந்ததும் தன்னை நிரபராதி என நிரூபித்தவர், அவரது வாழ்க்கை நிகழ்வுகளை கேட்டு அவரது படத்தை படமாக்க முன் வந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களை கூறியுள்ளார் மாதவன்.

“விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானப்படுத்த விரும்பினேன்.

நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்.” என கூறினேன். ஆனால் அவர், “ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் ‘ஸ்பை’ என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது. அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பிதார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என கேட்டார்.

நான் அவரிடம் ஒரு ஏமாற்றத்துடன் கேட்டேன், “நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை.” . அவர் அதற்கு ஒரு பதிலைக் கொடுத்தார், “நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன்.“ என்று சாதாரணமாக கூறிவிட்டார்.
நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார், பரப்புகிறார், ஆனால் மற்றவர் – எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்.

நடிகர் மாதவன் திரைப்படத்தில் வரும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காக தனது உடலில் உருவாக்கிய மாற்றத்தின் சில படங்கள் மற்றும் காட்சிகளை திரையிட்டு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தினார். அவர் வயதான தோற்றத்தை பெறுவதற்காக தனது பற்களை மறுசீரமைத்தார், மேலும் அவர் அந்த தோற்றத்திற்காக தொப்பை வரவைத்து காட்சிகளை எடுத்ததை பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், வெறும் 14 நாட்களில் அவர் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சி அடைந்ததைக் காட்டும் படத்தை காண்பித்து, கூட்டத்தினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்