சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்தவரை அந்த படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் இதுவரை ரசிகர்களுக்கு அறிமுகமாகாத நடிகர்களும் கூட ஏதோ ஒரு விதத்தில் தங்களது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதிலும் பதிந்து விடுவார்கள்.
கைதி படத்தில் அப்படி அப்பாவி போலீஸ் அதிகாரியாக வந்து அதிரடி காட்டிய ஜார்ஜ் மரியான் எப்படி ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளினாரோ அதேபோல விக்ரம் படத்தில் கமலின் மருமகளுக்கு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி வள்ளியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்தியும் அதேபோல ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளார்.
குறிப்பாக அவர் வேலைக்காரியாக இருந்து ஏஜென்ட் டீனாவகை மாறி அதிரடி காட்டும் அந்த சில நிமிட காட்சிகள் பரபரப்பின் உச்சம்.. ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத விஷயம்..
இந்தநிலையில் கொடைக்கானலில் நடைபெற்றுவரும் நினைவெல்லாம் நீயடா படப்பிடிப்பில் ஏஜென்ட் டீனாவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கி வருகிறார் இதன் படப்பிடிப்பில் விக்ரம் பட வெற்றிக்காகவும் ஏஜென்ட் டீனாவின் நடிப்புக்காகவும் அவரை பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் விழா எடுத்து கவுரவித்தனர்
டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவியாளராக வேலை செய்யும் டான்ஸர் வசந்தியாக இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏஜெண்ட் டீனா பணியாற்றி வருகிறார்.