90-களில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்று வளர்ந்த மஞ்சுவாரியருக்கு அப்போது தமிழில் நடிக்க நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால் தமிழில் பேசி நடிப்பதில் தனக்கு சிரமம் இருப்பதாக கூறி அப்போது வந்த பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து விட்டார் மஞ்சுவாரியர். ஆனால் காலம் இப்போது தமிழ் படத்தில் அவரை அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளதுடன், தற்போது அழகிய தமிழில் சொந்த குரலில் ஒரு பாடலையும் பாட வைத்துள்ளது தான் ஹைலைட்டான விஷயமே. பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் தற்போது மலையாளத்தில் இயக்கியுள்ள ஜாக் அண்ட் ஜில் என்கிற படம் தமிழில் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாகிறது.
இது வெறும் மலையாள படமாக மட்டும் உருவாகாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் தயாராகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் கிம் கிம் என்கிற தமிழ் பாடலை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இந்த பாடலை லலித் ஆனந்த் என்ற பாடலாசிரியர் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜு இசையமைத்துள்ளார்.