கங்காரு, மிருகம், உயிர் என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சாமி. அந்த பாணியை விட்டு வெளியே வந்து தற்போது சிறு குழந்தைகளை மையப்படுத்தி அக்கா குருவி என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இது ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய சில்ரன் ஆஃப் ஹெவன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகி உள்ளது. அது மட்டுமல்ல மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் சாமி. “இது போன்ற படங்களை வெளியிடுவதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருக்கிறது இதே படத்தை 2டி நிறுவனம் வெளியிட்டு இருந்தால் உடனடியாக வாங்கியிருப்பார்கள். இங்கே என்ன சொல்ல வருகிறோம் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதை தான் கவனிக்கிறார்கள்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் படம் பற்றி கூறும்போது, “மஜித் மஜிதி சார் இயக்கிய அந்த படத்தில் வறட்சியான ஒரு நிலப்பரப்பில் கதையை நகர்த்தி சென்றிருப்பார். ஆனால், ஷூ கண்டிப்பாக போட வேண்டும் என்ற சூழல் இருக்க வேண்டும் என்பதற்காக குளிர் பிரதேசமான கொடைக்கானல் பூம்பாறையில் கதை நடக்கும்படியாக அமைத்துள்ளேன். எனது பிள்ளைகளும் பத்மா ஸ்ரீ சேஷத்ரி பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள். சமயத்தில் அவர்கள் செருப்பு அணிந்து செல்வதும் உண்டு. ஆனால், கதையில் அப்படிப்பட்ட சூழல் இல்லாதது போல் காட்சியமைத்திருக்கிறேன்” என்கிறார்.


























