V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ் நடிகர் சங்கத்தை உருவாக்கிய தமிழ் சினிமாவின் தந்தை கே.சுப்ரமண்யம்

தமிழ் நடிகர் சங்கத்தை உருவாக்கிய தமிழ் சினிமாவின் தந்தை கே.சுப்ரமண்யம்

தமிழில் பேசும் படங்கள் வெளியாகத் தொடங்கி 82ஆண்டுகள் ஆகிவிட்டன.  தற்போது வருடத்துக்கு குறைந்தது 120 படங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐம்பது இயக்குநர்களாவது தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்கள்.

இதுவரை தமிழ்சினிமாவில் குறைந்தபட்சம் 1000 இயக்குநர்களாவது இருந்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? சில இயக்குநர்களே தலைமுறைகளைக் கடந்தும் மக்களால் நினைவு கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பான இயக்குநர்களை நாம் நட்சத்திர இயக்குநர் என்று அழைத்தோம் என்றால் இயக்குநர் கே.சுப்ரமண்யம் அவர்களை துருவ நட்சத்திரம் என்றுதான் அழைக்க வேண்டும். ஆம்.. தமிழ்ப்பட உலகின் தந்தை என்று அழைக்கப்படும் கே.சுப்ரமண்யத்தின் பிறந்தநாள் இன்று.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி சுப்புல்லட்சுமி, இசைக்குயில் எம்.எஸ் சுப்புல‌ஷ்மி,  கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி,  எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர்.

பாபநாசம் சிவனின் இசையையும்,பாடல்களையும் பெருவாரியாகப் பயன்படுத்தியதோடு நில்லாமல் அவரை நன்கு நடிக்கவும் வைத்தவர்.

பாடகி டி.கே.பட்டம்மாளை முதன்முதல் சினிமாவில் பாடவைத்தவர்.

தமிழின் முதல் குழந்தைகள் படத்தை இயக்கியவர். 

மிகப்பெரும் எழுத்தாளர்களான பிரேம்சந்த் முன்சி, கல்கி ஆகியோரது படைப்புகளை திரைப்படமாக்கியவர்.

காடாக இருந்த தேனாம்பேட்டையை திருத்தி அங்கே காங்கிரஸ் மைதானம் அமையக் காரணமாய் இருந்தவர்.

தென்னிந்திய வர்த்தகசபை உருவாக அஸ்திவாரமாக இருந்தவர் கே.சுப்ரமண்யம்.

இவரது முயற்சியால்தான் தமிழ் நடிகர் சங்கமும் உருவானது.  தமிழகத்தில் அப்போது தெலுங்கு, மலையாள நடிகர்களும் இங்கிருந்தே இயங்கினார்கள். அதனால் தமிழ் நடிகர் சங்கம் எம்.ஜி.ஆரின் ஆலோசனைப்படி “தென்னிந்திய நடிகர்கள் சங்கம்” என்று பெயர் மாற்றப்பட்டு அதன் முதல்தலைவராக எம்.ஜி.ஆரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை அந்த பெயரே நிலைத்திருக்கிறது.

இயக்குனர் கே.சுப்ரமண்யத்தின் வாரிசுகளும் கலையுலகில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டு புகழ்பெற்றார்கள். வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமானவரும் சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரை வைத்து உருவங்கள் மாறலாம் படத்தை இயக்கியவருமான எஸ்.வி.ரமணன் இவரது மகன்தான். பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யமும் மற்றும் அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமான ‘அபஸ்வரம்’ ராம்ஜியும் கே.சுப்ரமண்யத்தின் வாரிசுகள்தான்.

Most Popular

Recent Comments