விஜய் நடிப்பில் இன்னும் சில தினங்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டார் விஜய்.

அவரது 66-வது படமாக உருவாகும் இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் முதன் முறையாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய்.

கதாநாயகியாக ராஸ்மிகா நடிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடித்த தோழா என்கிற உணர்வுபூர்வமான படத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான்.

இந்தநிலையில் நேற்று சென்னையில் பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தப் பூஜையில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகி ராஷ்மிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும், நடிகர் சரத்குமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது ஆச்சரியத்தையும் பல யூகங்களையும் எழுப்பியுள்ளது.

இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் காரணமாகவே இந்த படத்தின் பூஜையில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

சரத்குமார் தற்போது இளம் முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜயுடன் அவர் இணைந்து நடிக்கிறார் என்றால் அது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.