தளபதி விஜய் நடிப்பில் இன்னும் ஒரு வாரத்தில் பீஸ்ட் படம் வெளியாக இருக்கும் நிலையில், மற்றுமொரு கொண்டாட்ட நிகழ்வாக இன்று தளபதி 66வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
இதுநாள் வரை நேரடி தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த நடிகர் விஜய் முதன்முறையாக தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் தளபதி விஜய்யின் படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்துவரும் ரசிகர்களை இந்த அறிவிப்பு ரொம்பவே உற்சாகப்படுத்தியது.
தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான், நடிகர் விஜய்யை தெலுங்கு திரையுலகிற்கு அழைத்து செல்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
கதாநாயகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் தமன் முதன்முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். .
கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் கவனிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இன்று காலை சென்னையில் பூந்தமல்லி கோகுலம் ஸ்டுடியோவில். நடைபெற்ற பூஜையில் நடிகர் விஜய், நாயகி ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்