இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் எந்நேரமும் மந்திரம் போல அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் தோனி. அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே தோனியை நேசித்து வந்தனர்.

அதனால்தான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது ஏதோ தமிழகத்தை சேர்ந்த ஒருவரே கேப்டன் ஆனது போல கொண்டாடி மகிழ்ந்தனர். சிஎஸ்கே என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே என்கிற அளவுக்கு ஐபிஎல் போட்டிகளில் தனது மாயாஜாலத்தை நிகழ்த்தி நான்கு முறை கோப்பையை பெற்றுத்தந்தார் தோனி.

எந்த ஒரு வீரருக்கும் விளையாட்டில் ஓய்வு என்று ஒன்று உள்ளது அல்லவா ? அதை அவர் மட்டுமல்ல அவர்களது ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் துவங்கியுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள தோனி அதை இன்னொரு திறமை வாய்ந்த வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து விடை பெற்றுள்ளார். ரசிகர்கள் இதுகுறித்து நெகிழ்ச்சியாக தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் முக்கியமான ஒரு வீடியோ ஒன்று மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது பிகில் படத்தில் தந்தை விஜய் (ராயப்பன்) தனது மகன் விஜய்யிடம் (பிகில்) அவர் ஃபுட்பால் விளையாட்டில் தனது பகுதி இளைஞர்களை எப்படி உள்ளே இழுத்து விளையாட்டே மூச்சு என மாற்றி எப்போதும் பிகில் என பேச வைத்து அவர்கள் அனைவரையும் பாதை மாற்றியதை புகழ்ந்து கூறும் வசனங்கள் படம் வெளியானபோதே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

தற்போது ரவீந்திர ஜடேஜாவிடம் தோனி தனது பொறுப்பை ஒப்படைப்பதாக ஒரு வீடியோ ஒன்றை உருவாக்கி, அதன் பின்னணியில் பிகில் படத்தில் விஜய் பேசும் இந்த வசனங்களை அழகாக மேட்ச் செய்து உள்ளனர்.

இந்த வீடியோ பார்ப்போரை நிச்சயம் நெகிழச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை. எம்எஸ் தோனியின் பெருமைகளை ஒரு நிமிட வீடியோவில் அழகாக வெளிப்படுத்தி அவருக்கு கூடுதல் கவலை சேர்த்து இருக்கிறது இந்த பிகில் வீடியோ.