தமிழ் திரையுலகில் நடிகர் சங்க தேர்தல் என்பது கிட்டதட்ட அரசியல் தேர்தல் போன்று மிக பரபரப்பான ஒன்றாகிவிட்டது. கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்டு விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட கூட்டணியினர் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். அந்த காலகட்டம் முடிவடைந்ததும் அடுத்த தேர்தலிலும் அதே அணி போட்டியிட்டது. அவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான இன்னொரு அணி போட்டியிட்டது.
ஆனால் தேர்தலில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக கூறி பாக்யராஜ் தலைமையிலான அணி வழக்கு தொடரவே. தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாண்டவர் அணி நீதிமன்றம் சென்று போராடி நடைபெற்ற தேர்தல் நியாயமான ஒன்றுதான் என நிரூபித்து, அதோடு வாக்கு எண்ணிக்கையையும் நடத்துவதற்காக சட்டப்போராட்டம் நடத்தி அந்தப் போராட்டத்திலும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாண்டவர் அணியை சேர்ந்த அனைவரும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இதுகுறித்து தனது நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சங்க பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷால்.
இதுபற்றி அவர் கூறும்போது, “வரலாற்றில் எப்போதுமே நேர்மையும் கடின உழைப்பும் ஒருபோதும் தோற்பதில்லை. நீண்ட நாட்களாக நாங்கள் நடத்தி வந்த இந்த போராட்டத்தில் இறுதியில் உண்மையே வென்றுள்ளது.. நான் எப்போதுமே நீதியை நம்புபவன்.. இந்த தேர்தலை மிகவும் நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களுக்கும் இந்த நீதிமன்ற அமைப்புக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின், காவல்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்டு வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நடிகர் சங்க கட்டட வேலைகளை மீண்டும் விரைவில் துவக்குவதற்கான பணிகளையும் ஆரம்பிக்க இருக்கிறோம்” கூறியுள்ளார்