இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு அவருக்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவானார். ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னும் பின்னும் கூட பல இசையமைப்பாளர்கள் உருவானார்கள்.. பல வெற்றி படங்களையும் கொடுத்தார்கள். இருந்தாலும் இளையராஜாவுக்கு அடுத்து ஏ.ஆர்.ரகுமான் என்று தான் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருகாலத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த ஒரு பெருமை, அதேசமயம் இவ்வளவு புகழின் உச்சிக்கு சென்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கூட கிடைக்காத ஒரு விஷயம் அனிருத்துக்கு அவரே எதிர்பாராமல் காலம் கொண்டுவந்து சேர்த்துள்ளது..
ஆம்.. முன்பெல்லாம் அதாவது எண்பது, தொண்ணூறுகளில் ஒரே சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அனைவரின் படங்களுக்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து கொண்டிருப்பார். அதற்குப்பிறகு வந்த ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளரும் இதுபோன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்தது இல்லை.
ஆனால் இளையராஜா பெற்ற அந்த பெருமை தற்போது அனிருத்துக்கும் கிடைத்துள்ளது.. ஆம்.. தமிழ் சினிமாவின் தற்போதைய நான்கு முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நால்வரின் படங்களுக்கும் ஒரே சமயத்தில் இசை அமைக்கும் பொறுப்பை கவனித்து வருகிறார் அனிருத். இதில் விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் ஆகியவை படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
அதேசமயம் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படங்களுக்கும் அனிருத் இசையமைக்க இருக்கிறார். அந்த வகையில் இரண்டு தலைமுறை சூப்பர் நட்சத்திரங்களின் படங்களுக்கு அனிருத் பணிபுரிவது ஏ.ஆர்.ரகுமானுக்கு மட்டுமல்ல, இசைஞானி இளையராஜாவுக்கே கிட்டாத ஒரு வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்