இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் குதிரைவால். இந்த படத்தை மனோஜ், சியாம் என்கிற இரட்டை அறிமுக இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். கனவில் தொலைத்ததை நிஜத்தில் தேடும் ஒரு கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார்.
இந்த பதம் பற்றி பா.ரஞ்சித் கூறும்போது, “வழக்கமான படங்களில் இல்லாத ஒரு புதிய கதைக்களம் இந்தப்படத்தின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கிட்டதட்ட ஒரு அரசியல் படம் என்றுகூட சொல்லலாம். குதிரையை பொறுத்தவரை இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குதிரையை வரலாற்றில் ஆதிக்கத்தின் சின்னமாகவே தான் குறிப்பிட்டு வருகிறார்கள். அதை இந்த குதிரை வால் படம் அழுத்தமாக சுட்டிக்காட்டும்.
புற உலகிலிருந்து விலகி அக உலகில் இருக்கும் ஒரு கதையைப் பற்றி தான் இந்த குதிரை வால் படம் பேசி இருக்கிறது. குறிப்பாக கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இந்த படம் இருக்காது. அதேசமயம் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அதனுடன் பர்சனலாக இணைத்து பார்த்துக் கொள்ளக்கூடிய அளவில் இந்த படம் உருவாகியிருக்கிறது. அதனால் திரை அரங்குகளில் இந்த படத்தை பார்த்தால் தான் அதன் முழுமையான அனுபவம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்