நடன இயக்குனராக இருந்து ஹீரோவாக மாறிய பிரபுதேவா, ஒருகட்டத்தில் இயக்குனராக மாறி படங்களை இயக்க ஆரம்பித்தார். அதனால் நடிப்பிலிருந்து ஒதுங்கி டைரக்சனில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது சில வருடங்களாக நடிப்பு, இயக்கம் என இரட்டை குதிரை சவாரியை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
குறிப்பாக படங்களை இயக்குவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த பொன்மாணிக்கவேல், பஹீரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இன்னும் அவரது படங்கள் வெளி வருவதற்கும் வரிசையில் காத்திருக்கின்றன.
இந்தநிலையில் ரேக்ளா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபுதேவா. சிபிராஜ் நடித்த வால்டர் படத்தை இயக்கிய இயக்குனர் அன்பு இந்தப்படத்தை இயக்குகிறார். அம்பேத்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் இந்தப்படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் பைவ்ஸ்டார் கதிரேசன், சி.வி.குமார், ராக்போர்ட் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.