கடந்த சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்சனில் சிம்பு நடித்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்த படத்தில் சிம்புவால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய மைக்கேல் ராயப்பன், அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார், விஷால் தலைவராக இருந்த தயாரிப்பாளர் சங்கமும் சிம்புவின் மீது இதற்கான நடவடிக்கையை எடுக்கும் முயற்சிகளில் இறங்கியது.
இந்த நிலையில் தனது பெயருக்கும் புகழுக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார் நடிகர் சிலம்பரசன்.
இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு தற்போது வழங்கியுள்ளது. இந்த அபராதத்தை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.