இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான மருத்துவம் கிடைப்பது என்பது ரொம்பவே கடினமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக வயதானவர்கள் மருத்துவமனையை தேடிச்சென்று சிகிச்சை பெறுவதில் அவர்களுக்கு நிறைய நடைமுறை சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை தமிழக அரசு துவங்கி நடத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவலாக ஏற்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும் இணைந்து மக்களை தேடி மருத்துவம் என்கிற பெயரிலேயே ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த குறும்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இதில் சுப்பு பஞ்சு ஒரு டிரைவர் கதாபாத்திரத்தில் இந்த திட்டம் குறித்து எடுத்துச் சொல்லும் வேலையை செய்திருக்கிறார்.
இந்த குறும்படத்தையும் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உருவான தலைவன் என்கிற வீடியோ ஆல்பத்தையும் சேர்த்து தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இன்று வெளியிட்டார்.
மேலும் விரைவிலேயே மக்களைத் தேடி மருத்துவம் என்கிற இந்த குறும்படம் திரையரங்குகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.