HomeNewsIndia“விதிகளை பின்பற்றுங்கள்; விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ட்விட்டருக்கு மத்திய அரசு ‘கடைசி’ எச்சரிக்கை!

“விதிகளை பின்பற்றுங்கள்; விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ட்விட்டருக்கு மத்திய அரசு ‘கடைசி’ எச்சரிக்கை!

கடந்த ஆண்டிலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இந்த மோதல் உச்சம் பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.ட்விட்டரை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது மத்திய அரசு. அதற்கு டூல்கிட் விவகாரம் வசமாக சிக்கிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட டூல்கிட்டை ட்விட்டர் ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ட்விட்டர் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இச்சூழலில் தற்போது புதிய ஐடி விதிகள் என்ற துருப்புச் சீட்டு மத்திய அரசின் கையில் சிக்கியிருக்கிறது. ட்விட்டரைப் பொறுத்தவரை யாஅர் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தான் அதன் ஸ்பெஷாலிட்டி.ஆனால் அதற்குத் தான் மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் வேட்டு வைத்துள்ளன. சமூக ஊடக நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும் போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு உடன்பட்டால் இந்தியாவில் தொழில் நடத்தலாம். இல்லையென்றால் சொந்த ஊருக்கு நடையைக் கட்டலாம் என மத்திய அரசு கறார் காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிகளை மாற்றுவது குறித்து எதுவும் பேசக் கூடாது. வேண்டுமென்றால் கால அவகாசம் தருகிறோம் யோசித்து உடன்படுங்கள் என்கிறது. ட்விட்டர் மத்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறது. இந்தியர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வண்ணம் புதிய விதிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. இதனை மறுத்த மத்திய அரசு ட்விட்டரை கடுமையாக விமர்சித்தது.

இன்று புதுப் பிரச்சினை ஒன்று கிளம்பியிருக்கிறது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ஃப்ளு டிக்கை நீக்கி வம்பை வாங்கியது ட்விட்டர். ஆறு மாதங்களுக்கு மேல் ஃப்ளு டிக் கணக்கு வைத்திருப்பவர்கள் செயல்படவில்லை என்றால் அந்த டிக்கை நீக்கிவிடுவது ட்விட்டரின் கொள்கைகளில் ஒன்று. அதன்படி செயல்படாத வெங்கையா நாயுடுவின் ஃப்ளு டிக்கை ட்விட்டர் நீக்கியது. இது பெரும் சர்ச்சையானது. உடனடியாக பாஜக தலைவர்கள் ட்விட்டருக்கு ட்விட்டரிலே கண்டனம் தெரிவித்தனர். பாஜக ஆதரவாளர்களும் வசைபாடினர்.இதன் எதிரொலியாக ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது மத்திய அரசு.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் இறுதி நோட்டீஸில், “ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய ஐடி விதிகளுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக உடன்பட வேண்டும். அவ்வாறு உடன்படாவிட்டால் ஐடி சட்டப்பிரிவு 79-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஐடி சட்டம் மற்றும் இந்தியாவின் பிற தண்டனைச் சட்டங்களின்படி மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ட்விட்டருக்கு தடை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments