2002ம் ஆண்டு “தளபதி விஜய்”யின் நடிப்பில் வெளிவந்த ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழில் கால் பதித்தார் நடராஜன் சுப்ரமணியன் என்னும் நட்டி.
இவர் பாலிவுட்டில் 1999ம் ஆண்டு வெளிவந்த ‘லாஸ்ட் ட்ரெயின் டூ மஹாகளி’ என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு வெளிவந்த ‘நாளை’ திரைப்படத்தில் நட்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த பெயரை தனது பெயருக்கு முன்னால் இணைத்து கொண்டார்.
அதன் பின், ‘சக்ர வியூகம்’, ‘மிளகா’, ‘முத்துக்கு முத்தாக’ என பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் எச்3 சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் கஸாலி அவர்கள் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் நட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தலைப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து “ஹிரோஷிமா” திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
தாஜ்நூர் இசையில், மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங்கில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரபல நடிகர்கள் மனோபாலா, டி.சிவா மற்றும் பலர் இதில் நடிக்கவுள்ளனர்.