தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பிஸியாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006ம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
அதனை தொடர்ந்து அஜித்தின் ‘கிரீடம்’, தனுஷின் ‘பொல்லாதவன்’, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, தளபதி விஜய் யின் ‘தலைவா’ , கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
ஜி.வி.பிரகாஷ் குமார், 2015ம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் வரிசையில் உள்ளது. இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார். ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ‘கோல்ட் நைட்ஸ்’என்பது குறிப்பிடத்தக்கது ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் இந்த ஆல்பம் உருவானது.
அதேபோல் ஜிவியின் முதல் ஆங்கில ஆல்பத்தின் பாடலான #HighandDry செப்.,17 அன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இளைஞர்களைக் கவரும் விதத்தில் உள்ள இந்த இசைப்பாடல் மிக வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹாலிவுட் பிரபலம் ஜஸ்டின் பைபருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துள்ளதால் அவர் ஜி.வி.பிரகாஷ் குமாரை டுவிட்டரில் பின் தொடர்கிறார்.