2016ம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா நடிப்பில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ரொமான்டிக் மற்றும் நகைச்சுவை திரைப்படம் “பெல்லி சூப்புலு”. இப்படம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
“பெல்லி சூப்புலு” திரைப்படம் தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஏ.எல். விஜய் அவர்களின் இணை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.விஷால் சந்திரசேகர் இசையில், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், எஸ் பி சினிமாஸ் தயாரித்துள்ளது.
நேற்று (அக்டோபர் 01) விஜய் தேவரகொண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் “பெல்லி சூப்புலு” படத்தின் தமிழ் ரீமேக் “ஓ மணப்பெண்ணே” படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு “பெல்லி சூப்புலு” படம் எனக்கு இன்றும் மகிழ்ச்சியையும், மறக்கமுடியாத அனுபவத்தையும் அளிக்கிறது. அதே போன்று உங்களுக்கும் அமையும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.