1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சம்சாரம் அது மின்சாரம்”. மறைந்த நடிகர் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருமான விசுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை செய்ததோடு தேசிய விருதும் பெற்றப் படம். இப்படத்தை ஏ.வி.எம் சரவணன் தயாரித்திருந்தார்.
இப்படத்தை இன்றைய தலைமுறையினரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கின்றனர் என்பதை உணர்ந்த இயக்குநர் விசு இதன் இரண்டாம் பாகத்தை தான் இறப்பதற்கு முன்பே முழு கதையையும் எழுதி வைத்துவிட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று வேதனையோடு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விசு உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் இறந்தார். தற்போது அவரது சிஷ்யர் பாஸ்கர்ராஜ் “சம்சாரம் அது மின்சாரம” பார்ட்-2 படத்தை இயக்கவிருக்கிறார்.
இவர், ராஜ் டிவியில் ஒளிபரப்பான அகட விகடம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இப்படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா பணியாற்றுகிறார். பரத்வாஜ் இசையமைக்க பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். சம்சாரம் அது மின்சாரம் படம் போலவே இதுவும் குடும்பப்படம் என சொல்லப்படுகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.