தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இயக்கி பிரபலமான, இயக்குனர், நடிகர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று (04/12/2024) மாலை காலமானார். அவருக்கு வயது 88. இந்த தகவலை கே. எஸ். ரவிக்குமார் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன் போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநரானாக அறிமுகமான திரைப்படம் ‘புரியாத புதிர்’. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வெளியான இந்த படத்தில், ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை ரேகா, சித்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், அடுத்தடுத்து சேரன் பாண்டியன், புது புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம் போன்ற திரைப்படங்களையும், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, வில்லன், வரலாறு, தசாவதாரம் போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களையும் இயக்கினார். குறிப்பாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் மற்றும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ஆகிய இருபெரும் நட்சத்திரங்களின் ஆஸ்தான இயக்குனரானார் கே.எஸ்.ரவிக்குமார்.
கே. எஸ். ரவிக்குமார் தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளராகவும் தெனாலி, கூகுள் குட்டப்பா, ஹிட்லிஸ்ட் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் இப்படியொரு துக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. அம்மையாரது இறுதி சடங்கு இன்று மதியம் 02:30 மணியளவில் நடைபெற்றது.