‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் திரைப்பட காப்பகத்தில் இணைத்துக் கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது!
தனுஷ் எழுதி,இயக்கி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ‘ராயனி’ன் திரைக்கதையை, திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கரை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனம் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் பெவர்லி ஹில்ஸ் நகரத்தில் அமைந்துள்ள மார்கரெட் ஹெரிக் நூலகத்தில் உள்ள அகாடமியின் புகழ்பெற்ற திரைக்கதை சேகரிப்பு தொகுப்பில், ஒரு நூற்றாண்டின் சினிமா வரலாற்றில் 15,000- க்கும் மேற்பட்ட திரைக்கதைகளுடன் ‘ராயனி’ன்’ திரைக்கதையை இணைப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
1930-களில் நிறுவப்பட்ட அகாடமியின் திரைக்கதை தொகுப்பானது, உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், அறிஞர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு விலைமதிப்பற்ற ஆதாரமாக விளங்குகிறது. இந்தத் தொகுப்பானது, வசனமில்லா பழைய, தரமான திரைப்படங்களை உள்ளடக்கிய சகாப்தம் முதல் சமகால மாபெரும் வெற்றித் திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான திரைப்பட வகைகளை உள்ளடக்கியது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராயன்’, ரசிகர்களிடையே வலுவாக சென்றடைந்தது. இந்த படம் தனுஷுக்கு நடிகராக 50-ஆவது திரைப்படமாகவும் மற்றும் இயக்குனராக இரண்டாவது திரைப்படமாகவும் இரட்டை மைல்கல்லாக அமைந்தது.
இத்திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘ராயன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.