V4UMEDIA
HomeNewsKollywoodகேரளா ரசிகப் பெருமக்களின் பேரன்பால் நெகிழ்ந்த 'தளபதி' விஜய்!

கேரளா ரசிகப் பெருமக்களின் பேரன்பால் நெகிழ்ந்த ‘தளபதி’ விஜய்!

மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான ‘தளபதி’விஜய் அவர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'(The G.O.A.T) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதற்காக, தற்போது அவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்திற்கு சென்று உள்ளார். ஏற்கனவே அவரது தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தமிழ் மொழியில் கேரளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கின்றன. இதனால் அவருக்கு கேரளத்தில் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ஆண் ரசிகர்கள் மற்றும் பெண் ரசிகைகள் என எந்த பேதமும் இன்றி அவர் மீது அதீத அன்பை பொழிந்து வருகின்றனர். கேரள ரசிகப் பெருமக்களின் அதீத அன்பில் நெகிழ்ந்து போய் உள்ளார் தளபதி விஜய் அவர்கள்.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே கேரவனின் மேல் ஏறி தனது ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார் ‘தளபதி’ விஜய். அவர் பேசுகையில்,“சேச்சி சேட்டன்மார்களே, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.ஓணம் பண்டிகையில் நீங்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதே அளவுக்கு சந்தோஷத்துடன் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் என்னுடைய நண்பா, நண்பிகளைப்போல நீங்களும் வேற லெவல். எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள்” என்றார்.

தொடர்ந்து மறுநாளும் பேசிய ‘தளபதி’ விஜய் அவர்கள்,”உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பாவிப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அப்படியே உங்கள் மனதில் வாழ வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது”, என்றும் நெகிழ்ந்து பேசி உள்ளார்.

தனது ரசிகர்களுக்கு தனது பாணியில் பறக்கும் முத்தத்தையும் அவர் பறக்க விட்டார். பின்னர் தனது அலைபேசியில் செல்ஃபி வீடியோவும் எடுத்து தனது அதிகாரப் பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் கேரள ரசிகப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தளபதி விஜய் அவர்களுக்கு கிடைக்கும் இந்த அளவு பேரன்பை கண்டு மலையாளத் திரையுலகமும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

இன்று கேரளாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார் தளபதி விஜய்!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு பணியாற்றுகிறார்.ராஜீவன் கலை இயக்குனராகவும்,திலிப் சுப்பராயன் சண்டை பயிற்சி இயக்குனராகவும் பணிபுரிகின்றனர்.

படம் சம்பந்தமான மேலதிக தகவல்கள் அதிகாரப் பூர்வமாக படக்குழு சார்பில் வெளியிடப்படும்.

Most Popular

Recent Comments