சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில், ‘ராக்கி’ மற்றும் சாணி காயிதம் புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் ‘தனுஷ்’ கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ பொங்கலை ஒட்டி 12/01/2024 அன்று வெளியாக உள்ளது. படத்தின் பாடல் வரி காணொளிகள்(Lyric Videos) சமீப காலமாக தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப் பூர்வமாக சமூக வலைதளங்களில் வெளியிடப் பட்டு வந்தன. இதனிடையே படத்தின் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release event) கடந்த 03/01/2024 அன்று நேரு உள் விளையாட்டரங்கில் பெரும் ரசிகர் திரளுடன் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர்கள் T.G.தியாகராஜன்,செந்தில் தியாகராஜன்,அர்ஜுன் தியாகராஜன், நடிகர் தனுஷ், ஷிவராஜ்குமார்,இயக்குனர் அருண் மாதேஸ்வரன், பிரியங்கா மோகன்,சந்தீப் கிஷன், எட்வர்ட் சானென்ப்ளிக்,ஜெயபிரகாஷ்,இளங்கோ குமாரவேல்,விஜி சந்திரசேகர்,காளி வெங்கட்,வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ்,இசையமைப்பாளர் G.V. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் த.ராமலிங்கம், ஆடை வடிவமைப்பாளார் காவ்யா ஸ்ரீராம், பாடலாசிரியர்கள் விவேக், உமாதேவி, படத்தொகுப்பாளர் நாகூரான் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்,இயக்குனர், தயாரிப்பாளர் ராம்குமார்,இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்,ரம்யா பாண்டியன்,தர்ஷன் தியாகராஜா,NSK ரம்யா மற்றும் நடிகர் ‘தனுஷ்’ அவர்களின் மகன்களும்,சகோதரிகளும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


முன்னதாக சமீபத்தில் மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் மற்றும் ஷிவராஜ்குமாரின் சகோதரர் புனித் ராஜ்குமார் இருவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. நான்கு தலைமுறைகளாக படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சத்யஜோதி நிறுவனத்தைப் பற்றிய காணொளி ஓளிபரப்பப் பட்டது.அப்போது பேசிய தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் “தொடரி, பட்டாஸ்,மாறன் போன்ற படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக தனுஷுடன் இவ்வளவு பெரிய படைப்பில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்றார்.

படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் பேசும்போது,”தனுஷ் அவர்களுடன் இப்படி ஒரு பெருமைமிகு படத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவருடைய குரலில் பாடல்களை கேட்கும்பொழுது இளையராஜா பாடுவதைப் போல உள்ளதாக” கூறினார்.

படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசும்போது,” பாரம்பரிய மிக்க சத்யஜோதி நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது. G.V.பிரகாஷுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் கடைசி அரைமணி நேரம் மிகவும் அருமையாக இருக்கும். சமூக வலைத்தளங்கள் நமது நேரத்தை திருடுபவையாக உள்ளன. என்னதான் நேர்மையாக இருந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்று ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது”, என்றார்.


இதனிடையே படத்தின் அதிரடியான முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 12/01/2024 அன்று பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.