சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது அடுத்த இரண்டு வருடங்களுக்கு மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். ஆனால் இதற்கு சில பக்கங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அப்படி தற்போது உருவாகியுள்ள எனக்கு என்டே கிடையாது என்கிற படத்தின் தயாரிப்பாளரும் இது குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இன்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.
அதேசமயம் இந்த படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் மூலமாக வெளியிடும் விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார்.
அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.