இயக்குனர் பாலா கடந்த வருடம் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்த படம் துவக்கத்திலேயே கைவிடப்பட்டது. அதே படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கப் போவதாக இயக்குனர் பாலா அறிவித்தார்.
அதன் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா.
இந்த போஸ்டரில் உடல் முழுவதும் சேறும் சேகதியும் அப்பிய நிலையில் ஒரு கையில் பெரியார் சிலையையும் இன்னொரு கையில் விநாயகர் சிலையையும் பிடித்தபடி அருண் விஜய் நிற்பது உண்மையிலேயே ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இது எந்த விதமான கதைக்களத்தில் படம் உருவாகியிருக்கிறது என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தப்படத்தை மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கின்றன.