ஜி.வி பிரகாஷ் நடித்த திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே வித்தியாசமான வகையில் கவனம் ஈர்த்த இவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. பிரபுதேவாவை வைத்து இயக்கிய பஹீராவுகும் அதே ரிசல்ட் தான்.
இந்த நிலையில் சில வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஆதிக் தற்போது விஷால் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கு முன்பு இவர் இயக்கிய படங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியுமா என்பது போன்ற வகையில் தான் இருந்தது. அதே சமயம் இந்த மார்க் ஆண்டனி அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு பொழுதுபோக்கு பலமாக உருவாகியுள்ளது.
இது குறித்து சமீபத்திய மார்க் ஆண்டனி புரமோஷன் நிகழ்ச்சியில் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “நான் பழைய ஆதிக் ரவிச்சந்திரன் அல்ல.. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுகின்ற “எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்” என்கிற வசனம் எனக்கே பொருந்துகிற வசனம் தான். படத்தில் மோதலே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.. அதை அடைய ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சலசலப்பு தான் கதை. இதில் மையப்புள்ளியாக ஒரு தொலைபேசி இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஷால் தனது கதாபாத்திரத்திற்கான மேக்கப்புடன் கேரவனில் இருந்து இறங்கியபோது கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த 500 பேரும் கைதட்டி வரவேற்றபோதே எங்களுக்கு படம் வெற்றி பெறும் என பாதி திருப்தி கிடைத்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பெரும்பாலான காட்சிகளில் விஷால் தன்னை மறந்து கைதட்டி விடுவார். கேட்டால் அருமையாக இருந்தது இன்னொரு டேக் எடு என்று கூறி விடுவார்” என்றார்.