Home News Kollywood ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சீமானுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சீமானுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இப்போதும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சுற்றுப்பயணம் கிளம்பிச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் பல ஆன்மீக தலங்கள், பல ஆன்மீக குருமார்களை சந்தித்தார். அதேபோல சில அரசியல் தலைவர்களையும் சந்தித்தார்.

அப்படி அவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை சந்தித்தபோது அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். தன்னைவிட வயது குறைவான ஒருவரின் காலில் அதுவும் அரசியல்வாதியின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றது இங்கே தமிழகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக எப்போதும் ரஜினியை விமர்சிக்கும் ஒரு கூட்டம் இப்படி அவர் காலில் விழுந்து தமிழகத்தின் மாண்பை கெடுத்துவிட்டார் என்பது போன்று விமர்சிக்க துவங்கினர்.

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இந்த விஷயத்தில் மீண்டும் ஏதாவது விமர்சிக்க போகிறார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் நேர்காணலின்போது அவரிடம் இது குறித்து கேட்டபோது, “ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைத்ததை செய்ய, மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்ய உரிமை உண்டு. எனக்கு புத்தகம் படிப்பதில் மகிழ்ச்சி. இசை கேட்பதில் மகிழ்ச்சி. அவருக்கு ஆன்மீகம் பயணங்கள் மகிழ்ச்சி தருகின்றன.

தன்னைவிட அறிவில் பெரியவர்களை விழுந்து வணங்குவதில் எந்த தவறும் இல்லை. அவர் அப்படி செய்ததனால் இங்கே வெங்காயம் விலை ஏறியதா என்ன ? அவர் தமிழகத்தின் போற்றி பாராட்டத்தக்க நடிகர். இந்த வயதிலும் அவர் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு வியாபாரம் உள்ள நடிகராக இருக்கிறார். அவரை கொண்டாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். பொதுவாக இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீமான் விமர்சித்து பேசிய சமயங்களில் எல்லாம் ராகவா லாரன்ஸ் பதிலுக்கு சீமானை விமர்சித்து பேசி இருக்கிறார்.

தற்போது சீமானுக்கு நன்றி தெரிவித்துள்ள லாரன்ஸ், “உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் தலைவரை விமர்சித்தபோது நானும் உங்களை விமர்சித்தேன். தற்போது நீங்கள் அன்பு காட்ட துவங்கியிருக்கிறீர்கள். நானும் உங்களிடம் அன்பு காட்ட துவங்கியுள்ளேன். அதே அன்போடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.