இந்தியாவின் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி இந்திய கிரிக்கெட் வீரர் என்பதைவிட கடந்த பல வருடங்களாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்கிற வகையில் தமிழ் மக்களுக்கு ரொம்பவே நெருக்கமாக ஆகிவிட்டார்.
அதனால்தான் அவரது மனைவி திரையுலகில் நுழைந்து படங்களை தயாரிக்க முடிவு செய்தபோது முதல் படத்தை, தனது கணவரை செல்ல பிள்ளையாக கருதும் தமிழகத்தில் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார்,
அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், லவ் டுடே புகழ் இவானா, யோகி பாபு, நதியா ஆகியோர் நடிப்பில் எல் ஜி எம் என்கிற படத்தை தயாரித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இந்தப்படத்தை இயக்கி, இசையும் அமைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோனியும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தொகுப்பாளர் பேசும்போது நடிகர் யோகிபாபு மிகப்பெரிய கிரிக்கெட் ஆர்வலர், கிரிக்கெட் விளையாடுவதில் ஈடுபாடு கொண்டவர். அவரை சி எஸ் கே அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தோனிக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
அதன் பிறகு தோனி பேசியபோது, “யோகிபாபுவின் கிரிக்கெட் ஆர்வம் எனக்கும் தெரியும். சிஎஸ்கே அணியில் தற்போது வெற்றிடம் ஒன்று இருக்கிறது. நான் எப்படியாவது சிபாரிசு செய்து அவரை அதை சேர்த்து விட பேசுகிறேன். ஆனால் யோகிபாபு கிரிக்கெட் விளையாட வருவதற்கு ஒழுங்காக கால்சீட் கொடுப்பாரா ? பயிற்சிகளின் போது தவறாமல் வந்து கலந்து கொள்வாரா ? இதை எல்லாம் அவர் செய்தால் அவரை சிஎஸ்கே அணியில் சேர்த்துக் கொள்ளலாம்” என்று ஜாலியாக குறிப்பிட்டார்.