மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் என்கிற திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் வடிவேலு முதன்முறையாக ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பகத் பாஸில் நடித்திருந்தார்.
ஒரு அரசியல் தலைவர் என்றாலும் கூட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கும் சம உரிமை அரசியலில் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..