தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் நடிகர் அசோக் செல்வனும் ஒருவர். அப்படி அவர் கதைகளை தேர்ந்தெடுக்கும் விதத்தையும் அவர் நடிப்பையும் பார்த்துதான் மலையாளத்தில் மோகன்லால் நடித்த மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் என்கிற படம் வெளியானது. விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குறிப்பாக ராட்சசன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சைக்கோ கிரைம் திரில்லர் படமாக இது படம் பார்த்த ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகெங்கிலும் சேர்த்து 50 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக இந்த படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் இந்த படத்தின் நன்றி அறிவிப்பு சந்திப்பின்போது கூறியுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்துள்ளது. அசோக் செல்வன் நடித்த படங்களில் அதிக அளவு வசூலித்துள்ள படம் இதுதான். அந்த வகையில் முதல் முறையாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார் அசோக் செல்வன்.