சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஒரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இன்னொரு பக்கம் படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் இந்த படத்தின் கேரள வெளியிட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் கைப்பற்றி உள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளில் படங்களை திட்டமிட்டபடி ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ரொம்பவே கைதேர்ந்த நிறுவனம் இது என்பதால் ஜெயிலர் படத்திற்கான அனைத்து வியாபார உத்திகளையும் சரியாக கையாளுவார்கள் என நாம் சொல்ல வேண்டியது இல்லை.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவிர மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் என மொழிக்கு ஒரு முக்கிய நடிகர் நடித்திருப்பதால் வெளிநாட்டில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது.