பொதுவாக இசைக் குடும்பத்திலிருந்து வரும் அவர்களது வாரிசுகளும் பெரும்பாலும் இசையமைப்பாளர்களாக உருவாவது தான் தமிழ் சினிமாவில் வழக்கமாக நடந்து வருகிறது. இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, கங்கை அமரன் மகன் பிரேம்ஜி ஆகியோர் வரிசையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் மகள் கதீஜா இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார்.

பூவரசன் பீப்பி, சில்லு கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட விருது படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவாகி வரும் மின்மினி என்கிற படத்தில் தான் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக சிறுவர்களை வைத்து ஏழு வருடங்களுக்கு முன்பு இவர் இயக்க துவங்கிய இந்தப் படத்தை அவர்கள் வளர்ந்து 7 ஆண்டுகள் கழித்து பெரியவர்களாக மாறும் வரை காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஹாலித சமீம்.

இது குறித்து இயக்குனர் ஹலிதா சலீம் கூறும்போது, “மின்மினி படத்திற்காக கதீஜா ரகுமானுடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. மிகப் பெரும் திறமைசாலி அவர். ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது சிறந்த இசை அமைப்பாளரும் கூட. சிறந்த இசை தற்போது உருவாகி கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்