இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக உதயநிதி நடிப்பில் வெளியான கலகத்தலைவன் படம் ஓரளவு அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. இந்த மாமன்னன் திரைப்படம், தான் நடித்த படங்களிலேயே தனக்கு பெயர் வாங்கித் தரும் அளவுக்கு இருக்கும் என உதயநிதி அவர்கள் கூறி வந்தார்.

வடிவேலுவுக்கும் இந்த படம் சிறந்த ரீ என்ட்ரி ஆக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது இந்த படம் தான் எனது கடைசி படமாக இருக்கும். இனி நான் படங்களில் நடிக்கப்போவதில்லை அப்படியே நடித்தாலும் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நடிப்பது பற்றி அப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்பேன்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் வேலைப்பளு இன்னும் கூடிவிட்டது. அதனால் தான் இந்த படத்தின் பணிகளை நான் முடித்து தர தாமதம் ஆகிவிட்டது.

என்னுடைய திரையுலக பயணத்தில் மாமன்னன் முக்கியமான படமாக இருக்கும். ஒருவேளை நான் திரும்பி நடிக்க வந்தாலும் அது மாரி செல்வராஜின் இயக்கத்தில் தான் என்று கூறியுள்ளார் உதயநிதி.