கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நடித்த பல நட்சத்திரங்கள், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள்.

அதில் அந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை துஷாரா விஜயனும் ஒருவர். இவர் தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியாகி உள்ள கழுவேத்தி மூர்க்கன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

ராட்சசி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரவேற்பை பெற்று வருவதுடன் துஷாரா விஜயனின் நடிப்புக்கும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து துஷாரா விஜயன் கூறும்போது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் கொடுத்துள்ளார்” என்றார்.