V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் சரத்பாபு மறைவு ; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

நடிகர் சரத்பாபு மறைவு ; ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று இயற்கை எய்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலகை  சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களையும் அஞ்சலிகளையும் அவருக்கு செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கொண்டுவரப்பட்டு தி.நகறில் உள்ள சரத்பாபு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் சரத்பாபு பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, “என்மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர் சரத்பாபு. என்னை சிகரெட் பிடிக்க கூடாது என அன்பாக கண்டித்து அறிவுறுத்துவார். அண்ணாமலை படத்தில் நான் சரத்பாபுவிடம் சவால் விடும் வசனத்தை பேசுவதற்கு எனக்கு 10 – 15 டேக்குகள் ஆனது.

அதை பார்த்துவிட்டு ஒரு சிகரெட் கொண்டு வந்து என்னிடம் கொடுக்கச் சொன்னார் சரத்பாபு. அதன்பிறகு அந்த வசனத்தை ஒரே டேக்கில் முடித்தேன். இதை என் அன்புக்காக மட்டுமே அவர் செய்தார் என்பதற்காக நான் சொல்கிறேன்.

என்னுடைய உடலை பார்த்துக் கொள் என்று அக்கறை செலுத்த சொன்னவர் இன்று இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக ஒரு கதாநாயகனாக குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. பெரும்பாலும் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் இன்றளவும் அவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பனாகவே அறிவார்கள்.

அந்த அளவிற்கு முள்ளும் மலரும் படத்தில் துவங்கி வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் இவர்களது நட்பு கூட்டணி தொடர்ந்தது. நண்பர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு குறித்து நடிகர் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது” என்று கூறினார்.

Most Popular

Recent Comments