கடந்த வெள்ளி அன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்கிற திரைப்படம் வெளியானது. ஒருநாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமூக நோக்கிலான அக்கறையுடன் படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாழ்க்கையை நடத்தவே சிரமப்படும் இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து அந்த குடும்பத்து பெண்ணான ஃபர்ஹானா தனது கணவரின் அனுமதியுடன் கால் சென்டர் வேலைக்கு செல்வதும் அங்கே அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் கதை.
இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்பது போல ஒரு செய்தி பரவி பல முஸ்லிம் அமைப்புகள் இந்த படத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. ஒரு சில இடங்களில் இந்த படம் ஓட விடாமல் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை பல்வேறு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஆகியோருடன் அமர்ந்து பார்த்தனர்.
அதன் பிறகு அவர்கள் பேசும்போது ஃபர்ஹானா திரைப்பத்தில் முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று கூறியுள்ளனர்.