மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு இளம் நடிகர் நாகை சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து ஹைதராபாத், சென்னை என மாறிமாறி இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு. அப்படி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது தெலுங்கில் பேச தடுமாறினார் வெங்கட் பிரபு.

மேலும் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிய அவர் இனி அடுத்து நாக சைத்தன்யாவுடன் இணைந்து பணியாற்றும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தான் பேசும்போது நிச்சயமாக முழுவதும் தெலுங்கிலேயே பேசுவேன் என்று உறுதி அளித்தார். அப்படி அவர் கூறும்போது ஒருவேளை அது கஸ்டடி படத்தின் பார்ட் 2 புரமோஷன் ஆக கூட இருக்கலாம் என்றும் கூறினார்.