அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த படத்தில் கதையின் நாயகன் என்றால் அது ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் என்கிற கதாபாத்திரத்தை சுற்றி தான் பின்னப்பட்டிருந்தது.
இந்தப் படம் நிச்சயமாக ஜெயம் ரவியின் திரை உலக பயணத்தில் ஒரு மைல் கல் தான். எப்படி பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்த முடித்த பின்பு அவர் இனி என்ன விதமான படங்களில், என்ன விதமான கதாபாத்திரங்களில் நடிப்பாரோ என்று ரசிகர்களுக்கும் சந்தேகம் இருந்தது.. ஏன் அவருக்கே கூட அந்த தயக்கம் இருந்தது.. தற்போது அதையும் மீறி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதேபோல் ஜெயம் ரவியும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து அவரது திரையுலக பயணத்தில் எந்த விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்களுக்கும் மீடியாவுக்குமே இருந்து வருகிறது.
ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயம் ரவி கூறும்போது, “பிரியாணி சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக நாளை இட்லி சாப்பிடாமல் இருக்க முடியுமா ? அதேபோல் தான் வழக்கம்போல சமூக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இந்த படம் கொடுத்திருக்கும் உயரத்தை மனதில் கொண்டு அதற்கேற்ற நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்கிற பொறுப்பு கூடியுள்ளது என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் அவருக்கும் வந்திய தேவனாக நடித்த கார்த்திக்கும் தான் அதிகமாக இணைந்து நடிக்கும் காட்சிகள் இருந்தன. படத்தில் அவர்கள் நட்பாக இருப்பது போலவே நிஜத்திலும் அவர்கள் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.
ஏற்கனவே ஜெயம் ரவி தான் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் கூட அந்த கதையை சொல்லி நன்றாக இருக்கிறது என்கிற பாராட்டையும் பெற்றுவிட்டார்.
அது மட்டுமல்ல கார்த்திக்காகவும் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாக கூறும் ஜெயம் ரவி, கார்த்திக்கிடமும் அந்தக் கதையை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம். இதெல்லாம் சரியான சந்தர்ப்பம் அமையும்போது நடக்கும் என்று கூறி உள்ளார் ஜெயம் ரவி.